Friday, December 6, 2019

குரங்கு தொல்லையால் அவதியுறும் திருக்கோவில், தம்பிலுவில் பிரதேச‌ மக்களுக்கான‌ தீர்வு இதோ !!!.


இயற்கை வனப்பும், பழ மரங்களும் நிறைந்த தம்பிலுவில், முனையூர் பகுதிகளில் தினமும் குரங்குகளின் அட்டகாசத்தால் பொதுமக்கள் நிம்மதியிழ‌ந்து தவிக்கின்றனர், மேலும் வீடுகளின் காய வைத்திருக்கும் உணவு பொருட்களை குரங்குகள் எடுத்து சென்று சாப்பிடுகின்றன. 

மேலும் காய வைத்திருக்கும் துணிகளை கிழித்து எறிகின்றன. திறந்து கிடக்கும் வீடுகளின் உள்ளே குரங்குகள் புகுந்து அட்டகாசம் செய்து உணவு பொருட்கள், காய்கறிகளை எடுத்து செல்கின்றன. சிறுவர்கள் கையில் வைத்திருக்கும் உணவு பொருட்களை கூட விட்டு வைப்பதில்லை, அதனையும் குரங்குகள் பறித்துச் செல்கின்றன. இவ்வாறு அட்டகாசம் செய்யும் குரங்குகளை பொதுமக்கள் விரட்டினால், அவை கடிக்க பாய்கிறது. தெருக்களிலும் குரங்குகள் அமர்ந்து கொண்டு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் சத்தமிடுகின்றன.


மேலும் குரங்குகள் சாலையில் சுற்றித்திரிவதால் விபத்துகளில் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்களும் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட வனஜீவராசிகள் திணைக்களம் சுற்றித்திரியும் குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதியில் கொண்டு விடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குரங்குகளை எவ்வாறான முறைகள் மூலம் கட்டுப்படுத்தலாம் என என்னால் சேகரிக்கப்பட்ட தகவல்களை இங்கே பகிர்கின்றேன்.

தகவல் 01 :  இந்தியாவில் , குரங்குகளை கொல்லும் விவசாயிகளுக்கு குரங்கொன்றிற்கு தலா 500 ரூபாயும்  மேலும், குரங்குகளை பிடித்து கருத்தடை செய்வதற்கு கொண்டுவந்தால் 700 ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு  குரங்குகளின் அட்டகாசம் குறைக்கப்பட்டுள்ளது. இதே போன்றதொரு நடவடிக்கை இங்கே மேற்கொள்ள முடியுமா ? என பிரதேச சபையினர் விவாதித்து ஒரு முடிவிற்கு வரலாம்.

தகவல் 02 : குரங்குகளை விரட்ட பாம்பு பெயின்டிங்.


தகவல் 03 :  பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் , குரங்கு நடுங்காதா ?
பிளாஸ்டிக்கில் தயாரிக்கப்பட்ட பாம்பை மாமரங்களில் ஆணி அடித்து உண்மையான பாம்பு போல் காட்சிப்படுத்தினால் , குரங்குகள் பயத்தினால் அப்பகுதிக்கு வராது.



தகவல்  4 : குறைந்த அழுத்தத்தில் உயிராபத்தை ஏற்படுத்தாத மின்சார வேலிகளை குரங்கு வரும் வழியில் அமைத்தல்,உதாரணமாக யானை வேலி அமைப்பது போல் மதில்களின் மேல் அமைக்கலாம்.




தகவல்  5 : குரங்குகளை விரட்டும் , பயங்கர குரங்கின் சத்தம் ஒன்றை ஒலிபெருக்கியில் ஒலிக்க விடவேண்டும்(கும்கி யானையை பயன்படுத்தி , ஏனைய யானைகளை விரட்டுவது போன்று)கீழே உள்ள இணைப்பில் அவ் ஒலி இணைக்கப்பட்டுள்ளது. இதை பரீட்சித்து பார்த்து , பதில் சொல்லுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.




தகவல்  6 :  “Monkey repeller “எனும் நவீன உபகரணம் ஒன்று ,தென் ஆபிரிக்கா மற்றும் இந்தியாவில் வெற்றிகரமாக பாவனையிலுள்ளது, இவ் உபகரணம்  20-50 kHz frequency  ஒலி அதிர்வுகளையும் 110 - 130 decibal ஒலிச் செறிவையும் வெளியிடும், இது மனிதனின் காதுகளுக்கு பிரச்சனை ஏற்படுத்தாத போதிலும், குரங்குகளின் காதில் ஈயத்தை கரைத்து ஊத்துவது போல் இம்சை செய்யும், ஆகவே குறித்த இடத்திலிருந்து குரங்குகள் தப்பி ஓடும். இத் தொழில் நுட்பமானது தொலைபேசிக் கோபுரங்களை வெளவால் போன்றவற்றிலிருந்து பாதுகாப்பதற்காக ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளது.


‍‍‍----நி.பிரசாந்தன் (ஆசிரியர்)----